யூடியூப் பார்த்து ஆபரேஷன் செய்த போலி டாக்டர்.. 15 வயது சிறுவன் பலி.. பீகாரில் பயங்கரம்

 

பீகாரில் போலி டாக்டர் ஒருவர் யூடியூப் பார்த்து ஆபரேஷன் செய்ததில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள மதவ்ரா பகுதியில் அஜித் குமார் பூரி என்பவர் அப்பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது கிளினிக்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனை அவனது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். 

அந்த சிறுவனுக்கு பித்தப்பை கல்லை அகற்றும் ஆபரேஷனை அஜித் குமார் பூரி மேற்கொண்டதாகவும், யூடியூப்பை பார்த்து அவர் இந்த சிகிச்சையை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மேல்சிகிச்சைக்காக பாட்னா மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு செல்லுமாறு அஜித் குமார் பூரி கூறியிருக்கிறார். 

அதன்படி பாட்னா மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றபோது, வழியிலேயே சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டான். இதை அறிந்த பின்னர் அஜித் குமார் பூரி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான போலி டாக்டர் அஜித் குமார் பூரியை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பீகார் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.