10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி.. தூக்குப்போட்டு அரசு பள்ளி மாணவர் தற்கொலை..!

 

காரைக்காலில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குப்போட்டு அரசு பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் எம்.ஜி.ஆர். நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அய்யப்பன் (40). டெம்போ டிரைவரான இவருக்கு லீமா ரோஸ் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களது இளைய மகன் ராகவன் (16). இவர், காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ராகவன் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராகவனுக்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

இதற்கிடையில் வீட்டில் தனியாக இருந்த மாணவன் ராகவன், மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த லீமா ரோஸ், தனது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராவகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது மனதை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.