பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 11 பேர் உடல் சிதறி பலி.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

 

மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் ஆலையில் உள்ள பட்டாசுகள் அனைத்தும் வெடிக்க தொடங்கின. இந்த விபத்தின்போது பட்டாசு ஆலையில் 150க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்துள்ளனர். இந்த கோர வெடி விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினார் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் ஆலைக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும் அமைச்சர் உதய் பிரதாப் சிங், கூடுதல் தலைமைச் செயலாளர் அஜித் கேசரி மற்றும் இயக்குநர் ஜெனரல் ஹோம் கார்டு அரவிந்த் குமார் ஆகியோரை ஹெலிகாப்டர் மூலம் ஹர்தாவுக்கு விரைந்து செல்லுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் பரவத் தொடங்கியதால் அங்குப் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த தொடர்பாக விசாரணை நடந்த 6 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு நியமித்துள்ளது.