45 நாட்களாக தூங்கவில்லை.. பணிச்சுமையால் ஊழியர் தற்கொலை.. கடிதத்தில் பகீர்

 

உத்தரப் பிரதேசத்தில் பஜாஜ் பைனான்ஸ் ஊழியர் பணிச்சுமையினால் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் பஜாஜ் பைனான்ஸ் கடன் நிறுவனத்தில் ஏரியா மேனேஜராக பணியாற்றி வந்தவர் தருண் சக்சேனா (42). இவர், நேற்று  அதிகாலை தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தருண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி மற்றும் 2 குழந்தைகளை மற்றொரு அறையில் பூட்டி வைத்துவிட்டு அவர்  தற்கொலை செய்துகொண்டதாகத்  தெரிகிறது.

பின்னர், போலீசார் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட அவரது தற்கொலை கடிதத்தில் அவர்  கூறியிருப்பதாவது, கடந்த 45 நாட்களாக நான் தூங்கவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. நான்  கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். வேலையில்  கொடுக்கப்பட்ட டார்கெட்டை நான் முடிக்கவில்லை என்றால் என்னை பணிநீக்கம் செய்துவிடுவதாக  உயர் அதிகாரிகள்  மிரட்டுகின்றனர் என்று எழுதிவைத்துள்ளார்.

உயிரிழந்தவரின் உறவினரும் அவருடன் வேலை செய்பவருமான தருண் இதுகுறித்து பேசுகையில், அவர் மேல் அதிகாரிகள் அவருக்கு மன ரீதியான அழுத்தத்தை கொடுத்துவந்தனர். நேற்று காலை கூட அவர் இறப்பதற்கு முன்பு அதிகாலை 6 மணிக்கு நடந்த வீடியோ மீட்டிங்கில், சரியான ஃபெர்பார்மன்ஸ் காட்டவில்லை என்றால் டிஸ்மிஸ் செய்துவிடுவோம் என்று மிரட்டினர். இதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீஸ் பேசுகையில், அவரின்  குடும்பத்தினர்  நிறுவனத்தில் மீது புகார் அளித்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இதுபோன்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணிச்சுமை மரணங்கள் கவலையளிப்பதாக  மாறி வருகிறது. சமீபத்தில் புனேவில் எர்னஸ்ட் எங் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் பணிச்சுமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டார். உத்தரப் பிரதேசத்தில் தனியார் வங்கி பெண் ஊழியர் பணியில் இருக்கும்போதே சேரில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். நிர்வாகம் அளித்த அதிக பணிச்சுமையினால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக சக ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.