மத்திய பிரதேசத்தில் வரதட்சணை கொடுமை.. கர்ப்பிணி பெண்ணின் கை கால்களை வெட்டி, தீ வைத்து எரித்து கொலை
மத்திய பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணின் கை கால்களை வெட்டி, தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தண்டி குர்த் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கர்ப்பிணி பெண் ரீனா கொலை செய்யப்பட்டதாக நேற்று அக்கிராமத்தை சேர்ந்த ஒருவர் ரீனாவின் குடும்பத்திடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரீனாவின் தந்தை ராம் பிரசாத் போலீசாருடன் தண்டி குர்த் கிராமத்தை அடைந்த போது எரிந்து கொண்டிருந்த ரீனாவின் உடலின் அருகில் இருந்து அவரது மாமியார் தப்பியோடினார்.
பின்னர் எரிந்து கொண்டிருந்த ரீனாவின் உடலை அணைத்த குடும்பத்தினர், உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரீனாவிற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு மிதுன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒன்னரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். தற்போது ரீனா 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில், அடிக்கடி வரதட்சணை கேட்டு ரீனாவை அவரது மாமியார் கொடுமைப்படுத்தியதாக ரீனாவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். கணவர் மற்றும் மாமியாரின் வரதட்சணை கொடுமையால் தான் ரீனா கொலை செய்யப்பட்டதாக அவரின் குடும்பம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.