வரதட்சணை கொடுமை.. 8வது மாடியில் இருந்து இரட்டை குழந்தைகளை வீசி கொன்று இளம்பெண் தற்கொலை.. தெலுங்கானாவில் அதிர்ச்சி!

 

தெலுங்கானாவில் வரதட்சனை கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் தனது இரு குழந்தைகள் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் (30). இவர், முடி திருத்தும் கடை வைத்துள்ளார். இவருக்கும், மஞ்சுரியாலா பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக ரூ2.5 லட்சம், யாதகிரியில் விவசாய நிலம் ஆகியவற்றை பெண்ணின் வீட்டார் கொடுத்துள்ளனர். 

திருமணத்திற்கு பிறகு தம்பதியர், செகந்திராபாத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் இரட்டையர்களான மகள் நித்யா, மகன் நிதரஸ் உள்ளனர். இந்நிலையில் சவுந்தர்யாவின் தாயாருக்கு, அரசு சார்பில் பன்சிலால்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 படுக்கை அறையுடன் வீடு வழங்கப்பட்டது. அந்த வீட்டை தனக்கு வரதட்சணையாக தரும்படி கணேஷ் கேட்டுள்ளார். 

இதுதொடர்பாக கணேஷ், சவுந்தர்யாவை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யா கோபித்து கொண்டு தனது குழந்தையுடன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும் கணேஷ் போன் செய்து, வீட்டை எழுதி வாங்கி வரும்படி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சவுந்தர்யா, நேற்று தனது 2 குழந்தைகளையும் 8வது மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்து 2 குழந்தைகளையும் கீழே வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த 2 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தன. மேலும் சவுந்தர்யாவும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ேசாகத்தை ஏற்படுத்தியுள்ளது.