சிகிச்சைக்கு வந்த ரவுடியை அடித்து கொன்ற மருத்துவர்.. பீகாரில் பகீர் சம்பவம்!
பீகாரில் சிகிச்சைக்கு வந்த ரவுடியை மருத்துவர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டம் ரூப்நகர் பகுதியை சேர்ந்த ரவுடி சந்தன்குமார். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் அஜித் பஸ்வான், ரவுடி சந்தன்குமாருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டார்.
இதனால், டாக்டருக்கும், ரவுடிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரவுடியும், டாக்டரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதை கண்ட மருத்துவமனை ஊழியர், டாக்டருடன் சேர்ந்து ரவுடி சந்தன்குமாரை சரமாரியாக தாக்கினார்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரவுடி சந்தன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி சந்தன்குமாரின் கூட்டாளிகள் கும்பலாக சென்று மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். பின்னர், மருத்துவமனை மற்றும் அருகில் இருந்த குடிசைக்கும் தீ வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த ரவுடி சந்தன்குமாரின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர். மேலும், ரவுடியை அடித்துக்கொன்றுவிட்டு தலைமறைவான டாக்டர் அஜித் மற்றும் மருத்துவமனை ஊழியரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.