அம்பானிக்கு வரும் லாபத்தை அமெரிக்க வரிவிதிப்பால் பாதிக்கப்படுபவர்களுக்கு பகிர்ந்தளியுங்கள்.. ரகுராம் ராஜன் ஆலோசனை!!
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று ஏற்றுமதியாளார்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆங்கில இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு,
“இந்தியா மீது 50% வரியை டொனால்டு ட்ரம்ப் விதித்ததன் பின்னணியில் வர்த்தக, பொருளாதார காரணங்களையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன. இந்த வரிவிதிப்பு வர்த்தகத்தைக் கடந்து, அரசியல் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.
இத்தகைய வரிவிதிப்புகள் பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்வோரையே பாதிக்கும்; அமெரிக்க நுகர்வோரை பாதிக்காது eன்று ட்ரம்ப் கருதுகிறார். ஆனால், உண்மையில் இது வருவாய் பெருக்கத்துக்கான ஒரு மலினமான உத்தி என்று சொல்லலாம்.
அமெரிக்கா தனது ராணுவத்தை பயன்படுத்தி ஆதிக்கத்தை செலுத்த முடியாத பகுதிகளில் இந்த வரி மூலம் தனது அதிகாரத்தை செலுத்திக் கொள்ளக்கூடும்.
நியாயம், இறையாண்மை இவற்றையெல்லாம் தாண்டி ‘பவர் ப்ளே’ தான் இப்போது பெரும் பங்கு வகிக்கிறது ட்ரம்ப்பை பொறுத்தவரை இந்தியா விதிகளை பின்பற்றவில்லை. இந்தியா தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நம்புகிறார். அதனால் வரி விதித்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய்களால் ஏற்படும் லாபத்தைவிட அதிக வரிகளால் ஏற்படும் பாதிப்பைதான் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு இந்தியா ஒரு சமநிலையான உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். ரஷ்யாவை மட்டுமே முழுமையாக நம்பாமல், பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் விருப்பத்தை வைத்திருக்க வேண்டும்.
அதிகப்படியான லாபம் ஈட்டும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இங்கே உள்ளன. அவர்கள் இன்னும் அதே மாதிரியான அதிகப்படியான லாபத்தை ஈட்டுகிறார்களா என்பதை அறிய வேண்டும். அப்படியிருந்தால், அந்த லாபத்தில் சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் அதிக வரியால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்காத வண்ணம் காக்கலாம்” என்று கூறியுள்ளார் ரகுராம் ராஜன்.
ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சந்தை விலைக்கு விற்பனை செய்து பெரும் லாபம் சம்பாதிப்பது அம்பானியின் நிறுவனம் தான் என்று நெடுங்காலமாகப் பேசப்படுகிறது. ஆக, அம்பானியின் லாபத்தை ஏற்றுமதியாளர்களுக்கு பிரித்துக் கொடுத்து அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யச் சொல்லுகிறார் என்றே தெரிகிறது.