ஏரியிலிருந்து 21 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றம்.. செல்போனுக்காக அரசு அதிகாரி அடாவடி.. அதிர்ச்சி சம்பவம்

 

சத்தீஸ்கரில் தனது செல்போனுக்காக ஒரு நீர்தேக்கத்தின் ஒட்டுமொத்த தண்ணீரை அரசு அதிகாரி வெளியேற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியின் உணவுத்துறையில் ஆய்வாளராக பொறுப்பு வகித்தவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் கடந்த திங்கட்கிழமை விடுமுறை எடுத்து அருகே கேர்கட்டா என்ற நீர்தேக்கத்திற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கு நீர் தேக்கத்தை பார்த்த ஆர்வத்தில் தனது ஸ்மார்ட் போனில் செல்ஃபி எடுக்கத் தொடங்கியுள்ளார். 

அப்போது ராஜேஷின் செல்போன் நீர் தேக்கத்திற்குள் விழுந்துள்ளது. தனது ஒரு லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போன் தண்ணீருக்குள் விழுந்ததை அடுத்து பதறிப்போன அவர், அங்கிருந்தவர்களை பிடித்து தேடித் தரக் கூறியுள்ளார். 15 அடி ஆழ நீர்தேக்கத்திற்குள் விழுந்த போனை அங்கிருந்தவர்கள் தேடி பார்க்க முயற்சித்தனர். இருப்பினும் அது பலனளிக்கவில்லை.

அதன்பின்னர், அதிகாரி செய்த காரியம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுதியுள்ளது. அந்த அதிகாரி நீர்தேக்கத்தில் உள்ள நீரை எல்லாம் வெளியேற்றி தனது செல்போனை கண்டுபிடித்து எடுத்துக்கொள்ளாலம் என முடிவு செய்தார். அதற்காக இரண்டு 30HP மோட்டார்களை வரவழைத்து தொடர்ந்து மூன்று நாள்கள் அவற்றை ஓட வைத்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளார்.

திங்கட்கிழமை மாலை தொடங்கி வியாழக்கிழமை வரை இது நடந்து கொண்டிருந்த நிலையில், அதற்குள்ளாக நீர் மேலான்மை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று இந்த செயலை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதற்குள்ளாக நீர் மட்டம் வெறும் 6 அடியாக குறைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதலவரும் பாஜக மூத்த தலைவருமான ரமன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அதிகாரிகள் பொது சொத்துக்களை தங்கள் மூதாதையர்களின் சொத்து போல சர்வாதிகாரத்துடன் கையாள்கிறார்கள். வெளியேற்றப்பட்ட நீரைக் கொண்டு 1,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்யலாம். பூபேஷ் பாகேலின் காங்கிரஸ் அரசு மோசமாக ஆட்சி நடத்துகிறது” என ட்விட்டரில் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சர்ச்சை அதிகாரி ராஜேஷை உடனடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டுள்ளார். மேலும், விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அமைச்சர் அமராஜித் பகத் உறுதி அளித்துள்ளார்.