இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டெலிவரி பாய்.. துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்.. டெல்லியில் பரபரப்பு!

 

டெல்லியில் பாலியல் வழக்கில் தப்பி ஓடிய குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் தனது மொபைலில் ஆப் மூலம் மளிகை பொருள்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த மளிகை பொருள்களை சுமித் சிங் என்ற டெலிவரி பாய் கொண்டு வந்துள்ளார். வீட்டுக்கு வந்து அந்த பொருள்களை இளம்பெண்ணிடம் சுமித் சிங் ஒப்படைத்துள்ளார். 

அப்போது அந்த இளம்பெண் தனியாக வீட்டில் இருப்பதை அறிந்துகொண்ட அந்த நபர் அத்துமீறி இளம்பெண்ணின் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் அங்கு தனியாக இருந்த அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் சுமித் சிங் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் , அவர் இருக்கும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரை கைது செய்யமுயன்றபோது, சுமித் சிங் போலீசாரிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

உடனடியாக சுதாரித்த போலீசார், அவரை விரட்டி பிடிக்க சென்றபோது சுமித் சிங் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் திரும்ப சுமித் சிங் காலில் சுட்டதில், குண்டு காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.