ரேஷன் கடைகளில் ஓணம் கிட் வழங்குவதில் தாமதம்? அரசு புதிய தகவல்

 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஓணம் கிட் வழங்க இருக்கும் நிலையில், அது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கேரளாவில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் ஆகும். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். மகாபலி சக்கரவர்த்தியின் அகங்காரத்தை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, அவரை அழிக்க முயன்றபோது மகாபலி சக்கரவர்த்தி திருமாலிடம் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களை காண ஒரு வரம் கேட்டதாகவும் அதனை ஏற்று திருமாள் அருள் புரிந்ததாகவும் அந்த மக்களின் நம்பிக்கை.

இந்த நிலையில், கேரளா அரசு ஓணம் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் கிட் வழங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. தற்போது மக்களுக்கு ஓணம் கிட் வழங்கப்பட்டு வரும் நிலையில், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சில பொருட்கள் இன்னும் சப்ளை டெப்போக்களுக்கு வரவில்லை. குறிப்பாக துவரம் பருப்பு, பச்சைப்பயறு, நெய், பாயாசம் கலவை, தேயிலை தூள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை இன்னும் வரவில்லை.

அதனால் ஓணம் கிட் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த கிட் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 21) முதல் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், நெய், பாயசம் கலவை உள்ளிட்ட பொருட்களும், துணி பைகளும் வரவில்லை. அதனால் கிட் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு மொத்தம் 6,07,691 ஓணம் கிட்கள் விநியோகிக்கப்படும். இதில் 5,87,691 AAY (மஞ்சள்) அட்டை வைத்திருப்பவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு கிட் விநியோகம் செய்ய ரூ. 32.7 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.