கடன் தொல்லை.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை.. புத்தாண்டு தினத்தில் அதிர்ச்சி!

 

பஞ்சாபில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் தரோலி குர்து கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தவர்கள் மன்மோகன் சிங் (55), அவரது மனைவி சரப்ஜித் கவுர், இவர்களின் இரண்டு மகள்கள், ஜோதி (32), கோபி (31), ஜோதியின் மகள் அமன் (3) என்பது தெரியவந்துள்ளது.

மன்மோகன் சிங்கின் மருமகன் சரப்ஜித் சிங், தனது குடும்பத்தினரை நேற்று போனில் தொடர்பு கொண்டுள்ளார். பல முறை அழைத்தும் யாரும் போனை எடுக்கவில்லை. இதையடுத்து அவர், வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, மன்மோகன் சிங்கும் அவரது மனைவியும் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதே நேரத்தில் ஜோதி, கோபி மற்றும் அமன் ஆகியோர் படுக்கையில் இறந்து கிடந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், ஆதம்பூர் டிஎஸ்பி விஜய் குன்வர் சிங், காவல் ஆய்வாளர் மஞ்சீத் சிங், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது, மன்மோகன் சிங் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அதில், கடன் தொல்லையால் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக விரக்தியடைந்து, தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட அனைவரின் கழுத்திலும் காயங்கள் இருந்தன என்றும், 3 வயது அமனை தூக்கிலிட்ட பிறகு மற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரது சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக ஜலந்தர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த சம்பவம், புத்தாண்டு தினத்தில் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.