மைசூருவில் தசரா யானைகள் இடையே மோதல்.. அலறியடித்து ஓடிய மக்கள்.. வைரல் வீடியோ
மைசூரு தசரா விழாவிற்கு வந்த 2 யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மக்கள் அலறியடித்தப்படி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் மைசூரு தசரா விழா வருகிற 3-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. 12-ம் தேதி தசரா ஊர்வலம் நடக்கிறது. இதில் பங்கேற்க 14 யானைகள் மைசூருக்கு வந்துள்ளன. இந்த யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு யானைகளுக்கு உணவு வழங்கும் பணி நடைபெற்றது. அந்த சமயத்தில் தனஞ்செயா யானை, திடீரென்று தனது அருகில் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த கஞ்சன் யானையை தாக்கத் தொடங்கியது. இதில் நிலைகுலைந்த கஞ்சன் யானை திடீரென்று மிரண்டு சங்கிலியை அறுத்துக்கொண்டு பிளிறியபடி அரண்மனை வளாகத்தில் இருந்து ஓடியது. அதனை துரத்திக் கொண்டு தனஞ்செயா யானை ஓடியது.
இதை பார்த்த அரண்மனை முன்பு கூடியிருந்த மக்கள் அய்யோ... அம்மா.. என அலறியடித்தப்படி ஓட்டம் பிடித்தனர். நடுரோட்டிற்கு சென்ற கஞ்சன் யானை மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தை பார்த்ததும் அமைதியாக நின்றது. தனஞ்செயா யானை மீது பாகன் அமர்ந்து யானையை ஆசுவாசப்படுத்தினார்.