ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்.. காங்கிரஸ் கட்சி அசத்தல் அறிவிப்பு!
மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால் ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே மத்திய பிரதேசத்தில் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள புண்டேல்காண்ட் பிராந்தியத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் பரப்புரை செய்து வருகிறார்.
இந்த நிலையில், சாகரில் நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி வென்றால் கொண்டு வரும் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்தார்.
அதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உரிமைத்தொகை வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். தற்போதைய இந்த வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவை இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த அந்த 2 மாநில தேர்தல்களில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. அந்த பார்முலாவில் தற்போது மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருகிறது.