இந்துத்துவா குறித்து சர்ச்சை கருத்து.. கன்னட நடிகர் சேத்தன் கைது! கர்நாடகாவில் பரபரப்பு

 

இந்துத்துவா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் சேத்தன் குமாரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2007-ல் வெளியான ‘ஆ தினகலு’ படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சேத்தன் குமார். அதனைத் தொடர்ந்து ராம், பிருகாளி, சூர்யகாந்தி, தசமுக, மைனா, நூரொண்டு நெனப்பு, அதிரதா, ரணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2013-ல் வெளியான ‘மைனா’ படத்தின் மூலம் பிரபலமானார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி மண்டியாவுக்கு வந்தார். அவர் மண்டியா மாவட்டம் மத்தூரில் வைத்து பெங்களூரு - மைசூரு இடையேயான விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் வருகையையொட்டி அங்கு உரிகவுடா - நஞ்சேகவுடாவின் உருவச்சிலைகளை பாஜகவினர் அமைத்திருந்தனர். அவர்கள் இருவரும் திப்புசுல்தானை கொன்றவர்கள் என்றும் கூறப்பட்டது. இது அரசியல் தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் பா.ஜனதாவினருக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் உரிகவுடா, நஞ்சேகவுடா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் சேத்தன் தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் இந்துத்துவா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

அந்த பதிவில், “இந்துத்துவ அரசியல் என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது. ‘ராவணனை ராமன் தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பியபோது இந்திய தேசத்தை தொடங்கினார்’ என சாவர்க்கர் கூறியது மிகப்பெரிய பொய் ஆகும். பாபர் மசூதியில் ராமர் பிறந்தார் என்பதும் திப்பு சுல்தானை கொன்றவர்கள் ஊரிகவுடா-நஞ்சேகவுடா என கூறுவதும் பொய் ஆகும். பொய்களால் கட்டமைக்கப்பட்ட இந்துத்துவ அரசியலை உண்மையால் தோற்கடிக்க முடியும்” என விமர்சித்திருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் சேத்தனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் நடிகர் சேத்தனை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே நடிகர் சேத்தன் சார்பில் ஜாமீன் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் அவரது வக்கீல் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையை நாளை (மார்ச் 23) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.