ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி.. மீண்டும் காஷ்மீர் முதல்வர் ஆகிறார் உமர் அப்துல்லா!

 

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதேபோன்று அரியானாவில் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 

ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை துவங்கி நடைபெற்றது. அரியானாவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 29 இடங்களிலும் பிற கட்சிகள் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 

காஷ்மீரில் உமர் அப்துல்லா மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உமர் அப்துல்லா 2009 ஜனவரி முதல் 2015 ஜனவரி வரை 6 ஆண்டுகள் காஷ்மீர் முதல்வராக பதவி வகித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, 10 ஆண்டுகளுக்கு பின் மக்கள் எங்களுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளனர். மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வோம்.  சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை வெளியே கொண்டுவர முயற்சிப்போம். இந்துக்கள், முஸ்லீம்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கொண்டுவரும் முயற்சிக்கு இந்தியா கூட்டணி கைகொடுக்கும். ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார். அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறாதது வருத்தமளிக்கிறது. அவர்களின் உட்கட்சி பூசல்களால் இது நடந்தது என்று நினைக்கிறேன் என்றார்.