விளையாட்டு துறையில் ரூ. 100 கோடி ஊழல்.. முன்னாள் அமைச்சர் ரோஜா மீது புகார்

 

ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க ஆந்திர சிஐடி போலீஸ் பரிந்துரைத்துள்ளனர்.

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்று சந்திரபாபுநாயுடு முதல்வர் ஆனார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்தது. ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில், நடிகை ரோஜா சுற்றுசூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தார். 

அந்த காலக்கட்டத்தில் ரோஜா நடத்திய ‘ஆடுதாம் ஆந்திரா’ என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தினார். அந்த போட்டிகளை நடத்த அப்போது இருந்த ஜெகன் மோகன் அரசு 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

இதற்கிடையே இந்த போட்டி நடத்தியதில் நடிகை ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு ஒன்றின் தலைவர் பிரசாத் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11-ம் தேதி புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

விளையாட்டு கருவிகள் வாங்கியது, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியது இப்படி அனைத்து விஷயங்களையும் தீவிரமாக விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு இருப்பதாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ரோஜா அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.