பணத்துக்காக கல்லூரி மாணவி கடத்தி கொலை.. சக மாணவன் வெறிச்செயல்.. வெளியான அதிர்ச்சி தகவல்

 

மகாராஷ்டிராவில் பணத்துக்காக உடன்படிக்கும் மாணவியை மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (22). இவர் புனே, வாக்கோலி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 29-ம் தேதி புனேயில் விமன் நகரில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றார். பின்னர் அவர் திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாக்யஸ்ரீயின் பெற்றோரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர், பாக்யஸ்ரீயை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை விடுவிக்க ரூ.9 லட்சம் தரவேண்டும் என்றும் மிரட்டினார். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், மாணவி கடத்தல் சம்பவத்தில் அவருடன் படித்து வரும் சகமாணவன் சிவம் புல்வாலே (23) மற்றும் அவரது நண்பர்கள் சாகர் ஜாதவ், சுரேஷ் இந்துரேவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். 3 பேரும் சேர்ந்து மாணவி பாக்யஸ்ரீயை கடத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மாணவன் சிவம் புல்வாலேக்கு அதிக கடன் இருந்ததாக தெரிகிறது. மாணவி பாக்யஸ்ரீயின் குடும்பத்தினர் வசதியாக இருப்பதை சிவம் புல்வாலே அறிந்து இருந்தார். எனவே அவர் மாணவியை கடத்தி அவரின் பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்க முடிவு செய்தார்.

சம்பவத்தன்று அவர் மாணவியை வணிக வளாகத்தில் இருந்து நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தினார். பின்னர் மாணவியை அகமத் நகர் மாவட்டத்துக்கு கடத்தி சென்று கொலை செய்தனர். உடலை அங்குள்ள சுபா கிராமப்பகுதி விவசாய நிலத்தில் குழி தோண்டி புதைத்தனர். இந்தநிலையில் போலீசார் மாணவியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தினர்.