ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி பலி.. உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்!

 

உத்தரகாண்டில் ரயில் தண்டவாளம் அருகே 20 வயது மாணவி ஒருவர், ரீல்ஸ் படம்பிடித்துக் கொண்டிருந்த போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் மூழ்கி இருக்கின்றனர். காவல் நிலையம், ரயில் நிலையம், ரயில்களில் முன்பு மற்றும் பேருந்துகளை நிறுத்தி ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதீத ஆர்வம் காரணமாக சிலர் உயிரைப் பணயம் வைத்து விதவிதமான ஸ்டண்டுகளை செய்து வீடியோ எடுக்கின்றனர். திறமையை காட்டுவதாக கூறி செய்யும் இத்தகைய ஸ்டண்டுகள் சில சமயம் மரணத்தில் முடிகின்றன.

அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஹரிபூர் டோங்கியா புக்காவாலா பகுதியை சேர்ந்த இளம்பெண் வைஷாலி (20). இவர், ஹரித்வாரின் ரூர்க்கி பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் வைஷாலி தனது தோழியுடன் கல்லூரிக்கு அருகில் உள்ள ரயில்வே கேட் பகுதிக்கு சென்றார்.

அங்கு அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நின்று செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த ரயில் வைஷாலி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இதுகுறித்து கங்கனாஹரின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) கோவிந்த் ராம் கூறுகையில், “மே 2-ம் தேதி, வைஷாலி ரயில் தண்டவாளம் அருகே ரீல் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது பார்மர் எக்ஸ்பிரஸ் அவர் மீது மோதியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது” என்று கூறினார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹரித்வார் போலீசார் ஆபத்தான முறையில் ரீல்ஸ்களை எடுக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொண்டனர்.