பாம்பு கடித்து கல்லூரி மாணவன் பலி.. எம்.பி.பி.எஸ் பட்டம் வாங்கிய சில மணி நேரங்களில் நேர்ந்த சோகம்!

 

கர்நாடகாவில் எம்.பி.பி.எஸ். பட்டம் வாங்கிய தினமே பாம்பு கடித்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு பயின்று வந்த மாணவன் ஆதித் பாலகிருஷ்ணன் (21). கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த இவர் தாயாருடன் தும்கூரில் வசித்து வந்தார். இவரின் தந்தை இத்தாலியில் வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, எம்.பி.பி.எஸ் படிப்பை ஆதித் பாலகிருஷ்ணன் நிறைவு செய்த நிலையில் கடந்த புதன்கிழமை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், ஆதித் பாலகிருஷ்ணன் பங்கேற்று எம்.பி.பி.எஸ். பட்டத்தை பெற்றார்.

பின்னர், இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்த ஆதித் பாலகிருஷ்ணன் வீட்டின் பின்புறம் உள்ள பார்க்கிங் பகுதியில் குடும்பத்துடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவரை பாம்பு கடித்துள்ளது. தன்னை பாம்பு கடித்ததை ஆதித் பாலகிருஷ்ணன் அறிந்திருக்கவில்லை. மேலும், குடும்பத்தினருக்கும் அது தெரியவில்லை.

இதனையடுத்து, அனைவரும் வீட்டிற்குள் சென்றனர். அப்போது, தனது அறைக்கு செல்லும்போது பாலகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பாலகிருஷ்ணனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அதில் பாம்பு கடித்ததற்கான அடையாளங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். விஷப்பாம்பு கடித்ததால் பாலகிருஷ்ணன் உயிரிழந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.பி.பி.எஸ். பட்டம் வாங்கிய தினமே பாம்பு கடித்து மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.