10-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. உயிரைப் பணயம் வைத்து காப்பி அடிக்க உதவிய மக்கள்.. வைரல் வீடியோ!

 

அரியானாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயிரைப் பணயம் வைத்து பிட் பேப்பர்கள் வழங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டாரு பகுதியில் உள்ள சந்திரவதி பள்ளியில் நேற்று தேர்வு நடைபெற்றது. தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த வினாக்களுக்கான பதிலை, உறவினர்கள், நண்பர்கள், பெற்றோர் ஆகியோர் வகுப்பறையின் வெளியில் இருந்து மாணவர்களுக்கு பிட் பேப்பர் கொடுத்து உதவினர்.

முக்கியமாக, ஆபத்தான முறையில் தேர்வு மையத்தின் சுவர்களில் ஏறி, ஆங்காங்கே ஜன்னல் வழியாக மாணவர்களுக்கு பிட் பேப்பர்களை அளித்தனர். இதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இது பதிவாகி சில நிமிடங்களில் வைரலானது.

இந்த வீடியோ பள்ளிக்கல்வித்துறையின் கவனத்திற்கும் சென்றது. இந்த தேர்வு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த சூழ்நிலையிலும் தேர்வில் மோசடி நடக்க இடம் அளிக்க மாட்டோம். இதுபோன்ற மோசடியை தடுப்பதற்காக தேர்வு மையங்களில் போலீஸார் பணியமர்த்தப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.