மத நிகழ்ச்சியில் மோதல்.. கனடா குடியுரிமை பெற்ற இளைஞர் வாளால் குத்திக்கொலை!! பஞ்சாப்பில் பகீர் சம்பவம்!!

 

பஞ்சாப்பில் நடந்த மத கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் கனடா குடியுரிமை பெற்ற நபர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் சிங் (24). இவர் கடந்த 2016-ம் ஆண்டு கனடா சென்றார். அங்கு வசித்து வந்த பிரதீப் சிங் கனடா நாட்டு குடியுரிமை பெற்றார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதீப் சிங் கனடாவில் இருந்து இந்தியா வந்துள்ளார். குருதாஸ்பூரில் உள்ள தனது கிராமத்திற்கு வந்த அவர் குடும்ப உறுப்பினர்களுடன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், ஹொலா மஹொலா சீக்கிய மத கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதீப் சிங் நேற்று பங்கேற்றார். நிகழ்ச்சி கொண்டாட்டத்தின் போது பிரதீப் சிங்கிற்கும் நிரஞ்சன் சிங் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

அப்போது, நிரஞ்சன் சிங் தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் பிரதீப் சிங்கின் வயிற்றில் குத்தினார். இந்த சம்பவத்தில் பிரதீப் சிங் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மோதலின் போது நூற்றுக்கணக்கானோர் இருந்த நிலையில் யாரும் சண்டையை தடுக்கவில்லை. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிரதீப் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரதீப் சிங்கை வாளால் குத்தி கொலை செய்த நிரஞ்சன் சிங்கை கைது செய்தனர். குற்றவாளி நிரஞ்சன் சிங்கிற்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் பாதுகாப்பில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கூட்டம் அதிகம் இருந்த இடத்தில் காரில் வந்த கும்பல் ஆபாசமான பாடலை இசைத்ததை தட்டிக்கேட்டதால் பிரதீப் சிங்கை அந்த கும்பல் கொலை செய்ததாக பிரதீப்பின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.