ஜூலை 14-ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்-3.. இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

சந்திரயான் 3 விண்கலம் வரும் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன், வழிகாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவற்றுடன் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகிறது.

அந்த வகையில், பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி நிலவுக்கு ‘சந்திரயான்-1’ என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது உலக நாடுகளை ஆச்சரியத்தில் தள்ளியது. நிலவில் செய்த ஆய்வில் அங்கு தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. எனினும், தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம் சவாலாக மாறியது. சந்திரயான்-2 கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியது. இதனால் சந்திரயான்-2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தோல்வியில் துவண்டுவிடாமல் தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்து உள்ளனர்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் ராக்கெட் விண்ணில் பாயும். மார்க்-3 ராக்கெட்டின் அனைத்து பரிசோதனைகளும் நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளது.


இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலம் வரும் 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது . ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையை தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வரும் 14-ம் தேதி விண்ணில் பாய்கிறது.