இனிமேல் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்.. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!

 

வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் இருந்து விலகி ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தை புதுச்சேரி கல்வித் துறை முழுமையாக பின்பற்ற உள்ளது.

புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் இல்லாத காரணத்தால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றி வந்தனர். இதனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தமிழ்நாடு அரசின் தேர்வு வாரியத்தின் கீழ் நடத்தப்பட்டு, தமிழுநாடு அசின் மதிப்பெண் சான்றிதழை புதுச்சேரி அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் அங்கீகரித்தது. 

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் இந்தாண்டு 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கும் மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியது. தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாட்டோடு இணைந்து பொதுத்தேர்வை எழுதி வருகின்றார்கள். 

வரும் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் இருந்து விலகி ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தை புதுச்சேரி கல்வித் துறை முழுமையாக பின்பற்ற உள்ளது.