காட்டு யானை தாக்கி கேமராமேன் பலி.. செய்தி சேகரிக்க சென்ற போது விபரீதம்

 

கேரளாவில் யானை தாக்கியதில் செய்தி புகைப்படக் கலைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏ.வி.முகேஷ் (34). இவர் பாலக்காடு மாவட்ட மாத்ருபூமி பத்திரிகையின் தலைமை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அவர் பணியாற்றி உள்ளார். இவர் இன்று காலை பாலக்காடு மாவட்டம் கோட்டிகட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் யானைகளை புகைப்படம் எடுக்க சென்றிருந்தார்.

அப்பகுதியில் உள்ள ஆற்றின் அருகே யானைகள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அதை முகேஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஆக்ரோஷமடைந்த காட்டு யானை முகேஷை சரமாரியாக தாக்கியது. இந்த தாக்குதலில் முகேஷ் படுகாயமடைந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது மறைவு பத்திரிகை துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த புகைப்பட கலைஞர் ஏ.வி.முகேஷின் குடும்பத்தினருக்கு கேரளா அரசு உரிய நிதி உதவி செய்ய வேண்டும் என பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.