பாலத்தில் இருந்து தலைகீழாக பாய்ந்த சுக்குநூறான பேருந்து.. 5 பேர் உடல் நசுங்கி பலி!
ஒடிசாவில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழுந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். பேருந்து, ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டம் அருகே இருந்த ஒரு பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொருங்கியது.
இதில், பயணிகள் அனைவரும் படுகாயமடைந்து பேருந்தில் சிக்கிக் கொண்டனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை தீயணைப்பு துறையினர் காஸ் கட்டர் மூலம் மீட்டனர்.
இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 39-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வேறு யாராவது பேருந்துக்குள் சிக்கியிருக்கிறார்களா என மீட்பு பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்தக் கோர விபத்து ஒடிசாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாநில நிர்வாகம் அந்தப் பகுதியில் மீட்பு பணிக்குத் தேவையான வசதிகளை செய்து தரவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.