பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 36 பேர் பலி.. முதல்வர் இரங்கல்!

 

உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி என்ற இடத்தில் இருந்து ராம்நகர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலா என்ற இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்து இன்று (நவ. 4) காலை நடந்துள்ளது.

இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் அல்மோரா மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி வினீத் பால் தெரிவித்துள்ளார். பேருந்து விபத்தில் சிக்கியபோது அதில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக அல்மோரா மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார். விபத்தை அடுத்து காவல்துறை, SDRF மற்றும் NDRF வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான பேருந்து விபத்தில் பயணிகளின் உயிரிழப்பு பற்றிய மிகவும் வருத்தமான செய்தி கிடைத்தது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.