ஆந்திராவில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து.. 8 பேர் பலியான சோகம்
ஆந்திராவில் லாரி மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி இன்று மாலை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். சித்தூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மொலிகி கட் பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதேவேளை, விபத்துக்குள்ளான பேருந்து மீது பின்னால் வந்த மற்றொரு லாரியும் மோதியது. இந்த கோர விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார். நாயுடு சம்பவத்தை பார்வையிட்டார் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.