நாய் கடித்தது ரேபிஸ் நோயால் சிறுவன் பலி.. வீட்டிற்கு தெரியாமல் மறைத்ததால் விபரீதம்!

 

உத்தரபிரதேசத்தில் நாய் கடித்ததை பெற்றோரிடம் கூறாத சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள சரண் சிங் காலனியை சேர்ந்தவர் யாக்கூப். இவர் அதே பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் ஷாவாஸ் (14). இவர், 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக பமோரியன் நாய் குட்டி வாங்கியதாக தெரிகிறது. 

இந்த நிலையில், கடந்த மாதம் அந்த நாய்க்குட்டி, ஷாவாஸை கடித்துள்ளது. இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால், அடிப்பார்கள் என்பதால், அதனை சிறுவன் மறைத்துள்ளான். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி காலையில் இருந்து சிறுவனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவனது நடத்தையிலும் மாற்றங்கள் தெரிந்துள்ளது. 

இதனைக் கண்டு பதறிப் போன பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், நாய் கடித்து விஷமேறி இருப்பதாக கூறினர். இது குறித்து விசாரித்ததில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாய்குட்டி ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னை கடித்ததாக ஷாவாஸ் கூறியுள்ளான். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று மாலை உயிரிழந்தான். 

இதுகுறித்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, பக்கத்து வீட்டை சேர்ந்த சுனிதா, ஆகாஷ், ஷிவானி மற்றும் ராஷி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நாய் குட்டிக்கு தடுப்பூசி போடாமல் வளர்த்து வந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. அதே நேரம், நாய் உரிமையாளர்கள் தங்கள் வீட்டு நாய் சிறுவனை கடிக்கவில்லை என விளக்கமளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.