ஐஸ்கீரிம் சாப்பிட்ட சிறுவன் பலி.. தந்தையின் சகோதரி கைது.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!

 

கேரளாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அரிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் அகமது ஹசன் ரிபாயி (12). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) அவனது அத்தை ஐஸ்கிரீம் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வாந்து எடுத்த சிறுவன் சோர்வாக இருந்துள்ளார். உடனடியாக, சிறுவன் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தான்.

இதையடுத்து, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடையில் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில், அந்த இடத்தில் இருந்து அவர்கள் சேகரித்த ஐஸ்கிரீம் மாதிரிகளில் ஆரோக்கியமற்ற எதுவும் இல்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து கடை தற்காலிகமாக மூடப்பட்டாலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பாதிக்கப்பட்டவரின் உடலில் அம்மோனியம் பாஸ்பைட் கலந்திருப்பது தெரியவந்தது, இது விஷம் வைத்து கொலை முயற்சியை உறுதி செய்தது. இதையடுத்து போலீசார் சிறுவனின் அத்தையான தாஹிரா (34) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விரிவான விசாரணைகளின் போது சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றன. 

இந்தக் குற்றத்தின் உண்மையான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பழிவாங்கும் நடவடிக்கையைத் தூண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சில கருத்து வேறுபாடுகள் குடும்பங்களுக்கு இடையில் இருந்தன என்று தெரிகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.