அசாமில் நடை பயணத்தின்போது எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர்.. ‘FLYING KISS' கொடுத்த ராகுல் காந்தி.. வைரல் வீடியோ!
அசாமில் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின்போது எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பிய பாஜகவினரை நோக்கி ராகுல் காந்தி ‘FLYING KISS' கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில், நடை பயணமாகவும், பேருந்திலும் பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மணிப்பூரில் இருந்து கடந்த 14-ம் தேதி தொடங்கிய அவரது யாத்திரை அருணாச்சல பிரதேசத்தை அடைந்தது.
இதையடுத்து வருகிற 25-ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அசாம் மாநிலத்தில் அவருடைய இந்திய ஒற்றுமை நீதி பயணத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் இன்று நகோன் பகுதியில் நடைபயணம் மேற்கொள்வதற்காக, பிரத்யேக பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாஜக தொண்டர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம், மோடி, மோடி என முழக்கமிட்டனர். உடனடியாக பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கேட்டுக்கொண்ட ராகுல் காந்தி, கீழே இறங்கி அவர்களை சந்தித்தார். அதன் பிறகு பேருந்தில் இருந்தபடியே அவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார்.
இது தொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராகுல்காந்தி, “அன்பிற்கான கடை எல்லோருக்காவும் திறந்திருக்கும். இந்தியா ஒன்றுபடும் இந்துஸ்தான் வெல்லும்” என இந்தியில் குறிப்பிட்டுள்ளார்.