இந்தியாவுக்கு பதில் இனி பாரத்.. சிபிஎஸ்சி பாட புத்தகங்களில் மாற்றம்
சிபிஎஸ்இ பாடத்திட்ட புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் இனி பாரத் என மாற்ற என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டு கூட்டணி அமைத்து உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் நடைபெற்ற இந்த கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில், தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிட முடிவு செய்யப்பட்டது. உடனே பாஜக தலைவர்கள் பாரதம் என்பதே உண்மையான பெயர் என்றும், நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசும் இந்தியா என்ற வார்த்தையை தவிர்த்து பாரதம் என பயன்படுத்த தொடங்கியது. ஆசியான் மாநாட்டு அழைப்பிதலில் பிரதமர் மோடியை இந்தியாவின் பிரதமர் என்று குறிப்பிடாமல், பாரதத்தின் பிரதமர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேபோல் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிய இரவு விருந்திற்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதலில் பாரதத்தின் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதேபோல் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன் வைக்கப்பட்ட நாட்டின் பெயர் பலகையில் இந்தியா என்று குறிப்பிடாமல் பாரத் என குறிப்பிட்டு இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன.
இந்த நிலையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்.சி.இ.ஆர்.டி ) சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை மாற்றி அமைப்பது குறித்து என்.சி.இ.ஆர்.டி. குழு ஆய்வு செய்தது. இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில், சி.பி.எஸ்.இ பாடப் புத்தகத்தில் ‘இந்தியா’ என்ற பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரை வழங்கி உள்ளது என அந்தக் குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அரசியலமைப்பின் பிரிவு 1(1) ஏற்கெனவே இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று கூறுகிறது. பாரதம் என்பது பழமையான பெயர். பாரதம் என்ற பெயரின் பயன்பாடு 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாடப் புத்தகங்களில் இந்துக்களின் வெற்றி குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு (NCERT panel) பரிந்துரைத்துள்ளது” என்றார்.