ஹனுமன் வேடத்தில் நடித்த கலைஞர் மேடையிலேயே சரிந்து விழுந்து பலி.. அரியானாவில் சோகம்!
அரியானாவில் ராம் லீலா விழாவில் ஹனுமன் வேடத்தில் நடித்த ஹரீஷ் மேத்தா மாரடைப்பால் மேடையிலேயே சரிந்து விழுந்து பலியானா சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த விழாவுக்கு லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர். பலர் நேரலையில் ராமரை கண்டு களித்தனர். கல்லால் ஆன 200 கிலோ எடை கொண்ட ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில் அரியானா மாவட்டம் பிவானி ஜவஹர் சவுக்கில் ராம் லீலா எனும் நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் மேடைக் கலைஞர் ஹரீஷ் மேத்தா நடத்தினார். இதில் ஹரீஷ் ஹனுமன் வேடம் போட்டிருந்தார். அவர் இந்த நாடக கம்பெனியில் 25 ஆண்டுகளாக ஹனுமன் வேடத்தில் நடித்து வருகிறார். ராமர் பட்டாபிஷேகம் குறித்து மேடைக் கலைஞர்கள் நடித்துக் கொண்டிருந்தனர். இந்த ராமர் பட்டாபிஷேகமானது பாடல் வடிவில் இருக்க அதற்கு எல்லோரும் நடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஹனுமனாக நடித்த ஹரீஷ் மேத்தா, ராமராக நடித்தவரின் பாதத்தில் விழுந்து வணங்கிய போது சரிந்து விழுந்தார். நீண்ட நேரமாகியும் அவர் எழாததால் உடன் இருந்த கலைஞர்கள் அவரை தூக்கினர். ஆனால் அவரிடம் எந்த வித அசைவும் இல்லை. இதனால் பதறிய கலைஞர்கள் உடனே அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.