ஆந்திராவில் இளைஞர் மாரடைப்பால் பலி.. இந்திய அணி தோல்வியை தாங்க முடியாததால் சோகம்!!
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், தொடரின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணிக்கு இந்தியா வெறும் 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 241 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கு எட்டியது.
இந்த நிலையில் தான் உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர் மன வேதனையில் இருந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி குமார் (25). இவர், தனது வீட்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.
எல்லோரும் போன்று டிராபி நமக்குத் தான் என்று ஜோதி குமாரும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், போட்டியில் மாற்றம் ஏற்பட ஏற்பட ஜோதி குமார் மன வேதனை அடைந்துள்ளார். அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பதறி போன அவருடைய குடும்பத்தினர் உடனடியாக ஜோதி குமாரை, திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக்கேட்ட ஜோதி குமாரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையேவும், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.