சீட்டுக்கட்டு போல சரிந்த அடுக்குமாடி கட்டடம்.. ஒருவர் பலி.. பரபரப்பு வீடியோ
கர்நாடகாவில் கனமழை காரணமாக புதிதாகக் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடைந்து விட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த முறை தொடக்கத்திலேயே மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் ஹென்னூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பாபுசாபல்யா பகுதியில் கனமழைக்கிடையில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்கு உள்ளிருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் 17 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.