சாலையில் உலா வந்த 8 அடி நீள முதலை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.. வைரல் வீடியோ!
மகாராஷ்டிராவில் சாலை ஒன்றில் பெரிய முதலை உலா வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பொதுவாக மழைக் காலங்களில் நீர்நிலைகளில் இருந்து உயிரினங்கள் தரைப் பகுதிக்கு வந்து மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறும். அப்படி தான் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் கிராமத்தின் குறுகலான சாலையில் பெரிய முதலை ஒன்று சாதாரணமாக உலா வந்தது. திடீரென முதலை, சாலையில் குறுக்கிட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது வாகனங்களை நிறுத்தினர். இதனால் அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், முதலை சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து வந்ததால் அதனை கண்டவர்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் காரில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் முதலை சாலையில் நடமாடுவதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.