பஜ்ஜி சாப்பிட ஆம்புலன்ஸ் சைரன்.. தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மீது வழக்கு! அதிர்ச்சி வீடியோ

 

தெலுங்கானாவில் பஜ்ஜியை சாப்பிடுவதற்காக சைரன் ஒலித்தப்படி ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்ற டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பஷீர்பாக் பகுதியில் நேற்று மாலை பயங்கர போக்குவரத்து நெரிசல் இருந்தது. அப்போது அந்த வழியாக தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் சைரனை ஒலித்தபடியே வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார், ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை கண்டார். உடனே அந்த வாகனம் செல்லும் திசையில் பச்சை விளக்கை போட்டுவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த வாகனம் சிக்னலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் சைரனை அணைத்துவிட்டு நின்றது. இதனை கவனித்த போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் மருத்துவமனை ஊழியர்களும் மிளகாய் பஜ்ஜி, போண்டா, டீ, காபி, ஜூஸ் ஆகியவற்றை வாங்கி சாவகாசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உடனே அந்த காட்சிகளை போலீஸ்காரர் மறைத்து வைத்திருந்த கேமராவில் வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விசாரணையில் ஆம்புலன்ஸில் நோயாளி இல்லாததையும், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சைரன் போட்டதையும் காவலர் உறுதி செய்தார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த காவலர், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக ரூ. 1,000 அபராதம் விதித்ததுடன், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார் கூறுகையில் ஆம்புலன்ஸ் சேவைகளை பொறுப்புணர்வுடன் பயன்படுத்துமாறு தெலுங்கானா போலீஸ் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. அது போல் சைரனை தவறாக பயன்படுத்தாதீர்.