ஏழை ஜோடிகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்துவைக்கும் அம்பானி குடும்பம்.. இடம் திடீர் மாற்றம்!!

 

அனந்த் - ராதிகாவின் திருமணத்தை முன்னிட்டு, ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பிரம்மாண்ட விழாவை நடத்த அம்பானி குடும்பம் முடிவு செய்த நிலையில், தற்போது இடம் மாற்றப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழும தலைவரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், விரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் வரும் 12-ம் தேதி மும்பையில் ஜியோ வோர்ல்டு டிரேட் சென்டரில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் பரபரப்பை நடைபெற்று வரும் வேளையில், இவர்களின் திருமணத்திற்கு முன் அதாவது இன்று அம்பானி குடும்பம், ஏழை ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.

ஏஎன்ஐ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட தகவலின்படி, இன்று (ஜூலை 2) மாலை 4.30 மணியளவில், மகாராஷ்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள சுவாமி விவேகானந்த வித்யாமந்திரில் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்யும் பிரம்மாண்ட விழா அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியினர் ஏற்பாடு செய்துள்ள இந்த திருமண விழாவிற்கு இக்குடும்பம் முழுமையாக நிதி உதவி செய்வது மட்டுமல்லாமல், நேரடியாக விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் ஜோடிகளை வாழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த நிகழ்வு தற்போது புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏழை எளிய ஜோடிகளின் திருமணம் தானேயில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முன்பு நடைபெறும் இந்த திருமண விழா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த சில மாதங்களாக இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட முன்வைபோக நிகழ்ச்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.

கடந்த 2 வாரமாக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி பல பிரபலங்களை நேரில் சென்று திருமணத்திற்கு அழைத்து வருகின்றனர். இந்த புகைப்படங்களும்,வீடியோக்களும் டிரெண்டிங் ஆனது, இதில் முக்கியமாக ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண பத்திரிக்கை வீடியோவும், திருமணத்திற்கு அழைக்கச் சென்ற போது ஏக்நாத் ஷின்டே மீது ஆனந்த் அம்பானி தோளில் கை போட்ட வீடியோ மக்கள் மத்தியில் டிரெண்டானது.