மேற்கு வங்கத்தை ஆட்டிப்படைக்கும் அடினோ வைரஸ்... 24 மணி நேரத்தில் 7 குழந்தைகள் பலி!! 

 

மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுவாசக் கோளாறு காரணமாக 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மூத்த சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே ஏதாவது ஒரு பெயரில் மாதம் ஒரு நோய் பரவி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்று ஏற்படுத்திய பேரழிவுக்கு பிறகு எந்த நோய் பரவினாலும் அது ஒரு விதமான பதற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. அந்த வகையில், தற்போது மேற்கு வங்கத்தில் குழந்தைகளை புதிய நோய் ஒன்று தாக்கி இருக்கிறது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் மேற்கு வங்கத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி போன்ற நோய்கள் பரவி சில குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனை அடுத்து அவர்களின் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ததில் அடினோ வைரஸ் என்ற புதிய நோய் அவர்களுக்கு மத்தியில் பரவி வருவது தெரியவந்தது.

இந்த நோயின் காரணமாக கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மேற்கு வங்கத்தில் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்து உள்ளன. காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

அடினோ வைரஸ்கள் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அடினோ வைரஸ் வேகமாக பரவக்கூடிய தொற்று நோயாகும். குழந்தைகள் உள்ளிட்ட பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் ஆபத்தானது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஐந்து குழந்தைகளும், பங்குரா சம்மிலானி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளும் இறந்துள்ளனர் என்று அதிகாரி கூறினார், அடினோ வைரஸ் அறிகுறிகளுடன் உள்ளவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாகவும், 600 குழந்தை மருத்துவர்களுடன் 121 மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் நிர்வாகம் கூறியதுள்ளது.