பீகாரில் மொத்தம் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. காரணம் கேட்கும் உச்சநீதிமன்றம்!!
65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை பீகார் மாநிலத்தில் நீக்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல்வேறு கேள்விகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எழுப்பியது. மேலும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையில் ஆதார் அட்டையையும் ஆவணமாக இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த வாரம் பீகார் மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்றும், நவம்பர் 14ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பான வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர்,‘‘பீகாரில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 3.66லட்சம் வாக்காளர்களை எந்தவித காரணமும் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் நீக்கம் செய்துள்ளது. சம்பந்தபட்ட நபர்களுக்கு கூட விளக்கம் தரப்படவில்லை. குறிப்பாக பீகார் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக தற்போது மொத்தம் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையாக இல்லை.
முதலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் எத்தனை பேர் மீண்டும் சேர்க்கப்பட்டனர் என்பதையும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. 2003 தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனைத்தையும், தேர்தல் ஆணையமே மீறிவருகிறது. குறிப்பாக ஒவ்வொரு வாக்காளர்களும் நீதிமன்றத்தை அல்லது தேர்தல் ஆணையத்தை நாடி நிவாரணம் பெற வழியில்லை பல லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் ஒரு நொடியில் நீக்க முடியும். ஆனால் அரசியல் கட்சிகள் அதன் உண்மை நிலையை அறிய, ஒப்பீடு செய்ய வாய்ப்பு கிடையாது. எனவே அனைத்தையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்,
‘‘பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட வாக்காளர் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். தற்போதைய சூழலில் அது குழப்பத்தை நீக்கும். குறிப்பாக முன்னதாக நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் மீண்டும் சேர்க்கப்பட்டவர்கள் எத்தனை பேர், புதிய வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் தேர்தல் நடைமுறையின் மீது நம்பிக்கை ஏற்படும்.
தேர்தல் என்பது பொதுவான ஜனநாயக நடவடிக்கை ஆகும். அதில் எந்த குழப்பமும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை தேர்தல் ஆணையம் சுய பரிசோதனை செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் கூறினார்கள்
தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ பீகார் மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் பணிகளுக்குப் பணியாளர்கள் செல்ல வேண்டி உள்ளதால், மீண்டும் பட்டியல் விவகாரங்களை ஆராய நேரம் இல்லை. மேலும் தற்போதுள்ள நிலையில் புதிய உத்தரவுகள் பிறப்பித்தால் தேர்தலை பாதிக்கும் என்று தெரிவித்தார். \
இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரத்தில் 3.66 லட்சம் வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் (நாளை) பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.