கல்லூரி வளாகத்தில் காதலியை சுட்டுக்கொன்ற மாணவர்.. விடுதியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்!!

 

டெல்லியில் கல்லூரி வளாகத்தில் காதலியை சுட்டுக்கொன்று கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை சமூக அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் அஞ்சு சிங். அதேவகுப்பில் நேஹா என்ற மாணவியும் பயின்று வந்தார். நட்புடன் பழகி வந்த நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதேவேளை, காதலர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நிலவி வந்துள்ளது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் கேன்டினில் இருவரும் இன்று மதியம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அஞ்சு தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காதலி நேஹாவை சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் நேஹா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், அங்கிருந்து சென்ற அஞ்சு கல்லூரியில் உள்ள ஆண்கள் விடுதிக்கு சென்று அஞ்சு தனது அறையில் துப்பாக்கியால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி வளாகத்தில் காதலியை சுட்டுக்கொன்ற கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.