20 நாட்களில் தக்காளி விற்று ரூ.30 லட்சம் வருவாய் ஈட்டிய விவசாயி கொடூர கொலை.. ஆந்திராவில் நேர்ந்த சோகம்!

 

ஆந்திராவில் தக்காளி விவசாயி ஒருவர் வியாபாரத்தில் அதிக வருமான ஈட்டியதால், கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தார்.

இந்த நிலையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கடந்த 20 நாட்களில் ராஜசேகர் ரெட்டிக்கு ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்தது. இதனால் ராஜசேகர் ரெட்டி திடீரென லட்சாதிபதியானார். நேற்று ராஜசேகர் ரெட்டி தக்காளி வியாபாரத்தை முடித்துக் கொண்டு வசூலான பணத்துடன் தனது பைக்கில் வந்தார். அவரை மர்மநபர்கள் வழி மறித்தனர்.

அவரை கை, கால்களை கட்டி மறைவான இடத்திற்கு கடத்தி சென்றனர். அங்கு ராஜசேகர ரெட்டியிடம் பணத்தைக் கேட்டு அடித்து துன்புறுத்தினர். அவர் பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் ராஜசேகர் ரெட்டியை அடித்து கொலை செய்தனர். பின்னர் பிணத்தை வீசிவிட்டு சென்றனர்.

அந்த வழியாக சென்றவர்கள் ராஜசேகர் ரெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜசேகர் ரெட்டி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராஜசேகர ரெட்டியிடம் உள்ள ரூ.30 லட்சத்தை பறிக்க அவரை கடத்திச் சென்று துன்புறுத்தியதாகவும் பணம் தர மறுத்ததால் அவரை கொலை செய்து வீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


ராஜசேகர் ரெட்டிக்கு தெரிந்த நபர்கள் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. ராஜசேகர் ரெட்டிக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தக்காளி விவசாயி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.