ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பேருந்து.. அலறிய மக்கள்.. பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ!!

 

உத்தரப்பிரதேசத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நஜிபாபாத்தில் இருந்து ஹரித்வாருக்கு 36-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது பிஜ்னூர் கோட்வாலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பயணிகள் பேருந்து சிக்கிக்கொண்டது. இந்த சம்பவத்தால் பயணிகள் பீதியடைந்தனர், அவர்களில் சிலர் பேருந்தின் கூரையில் ஏறி உதவி கோரி சத்தம் போட்டனர்.

தகவல் அறிந்து மண்டவாலி போலீசார் ஹரித்வார் மற்றும் பிஜ்னூரில் இருந்து மீட்பு குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்பு பணி உடனடியாக தொடங்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பேருந்து கவிழ்ந்து விழாமல் இருக்க, பாலத்தில் கிரேன் பொருத்தப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து எஸ்பி சிட்டி பிரவீன் ரஞ்சன் சிங் கூறுகையில், பிஜ்னோரின் நஜிபாபாத் டிப்போவில் இருந்து காலை 8 மணியளவில் பேருந்து ஹரித்வாரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இடைவிடாத மழை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வெள்ளம் போன்ற சூழ்நிலை காரணமாக, உத்தரபிரதேசம் - உத்தரகாண்ட் எல்லையில் அமைந்துள்ள கோட்வாலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்தது.


அந்த வழியாக சென்று கொண்டிருந்த போது, ​​பேருந்து திடீரென தண்ணீரில் சிக்கியது. பாலத்தில் இருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.