இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி.. மருத்துவர் அலட்சியத்தால் திடீர் மரணம்!

 

கர்நாடகாவில் இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் மருத்துவர் அலட்சியத்தால் 6 வயது சிறுமி உயிரிழந்தாக பெற்றோர் கூறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி அருகே விஜயநகரை சேர்ந்தவர் தாதாபியர். இவரது மனைவி நசியா பானு. இந்த தம்பதிக்கு ரபியா (6) என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. சிறுமியின் உடல்நிலை மோசமான நிலையில், சிறுமியை தேவனஹள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு பொதுப்பிரிவில் வைத்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாள். அங்கு சேர்க்கப்பட்ட 3 மணி நேரத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். 

இதுகுறித்து அறிந்ததும், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் தங்களது மகள் உயிரிழந்ததாக கூறி போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.