பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தை... துடிதுடிக்க உயிருடன் புதைத்து கொன்ற தாய்.! புதுச்சேரியில் பரபரப்பு

 

புதுச்சேரியில் பிறந்து 29 நாட்களை ஆன பெண் குழந்தையை தாய் கடற்கரையில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே மூர்த்தி குப்பம் புதுகுப்பம் கடற்கரையில் இன்று பச்சிளம் குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள், இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். 

இந்த நிலையில் புது குப்பம் குலத்துக்கு அருகே குடும்பத்துடன் வசிக்கும் நாடோடி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சங்கீதா ஆகியோர் தங்களது குழந்தையை காணவில்லை என தேடினார்கள்.

மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது மணலில் புதைந்து இறந்து கிடந்த குழந்தை தங்களுடையது என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து குமரேசன் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் கதறி அழுதனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் குமரேசனுக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளது. அதனை தொடர்ந்து சங்கீதாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

கடந்த சில மாதம் முன்பு கர்ப்பிணையாக இருந்த சங்கீதா தனது தம்பி குடும்பத்துடன் கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளார். அன்னைத் தொடர்ந்து அவர்கள் சமுதாய நலக்கூடம் அருகே சில நாட்கள் வசித்துள்ளனர். பின்னர் குளக்கரைக்கு அருகில் வசித்து வந்துள்ளனர். கடந்த 29 நாட்களுக்கு முன்பு சங்கீதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று குழந்தை அழுததால் குமரேசன் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்போது குழந்தையோடு தானும் தூங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். குமரேசன் மற்றும் சங்கீதா தம்பதியிடம் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், சங்கீதா - குமரேசன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் குமரேசன் குழந்தை யாருக்கு பிறந்தது என்று கேட்டு சங்கீதாவிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்தரம் அடைந்த சங்கீதா, பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, கிருமாம்பாக்கம் போலீசார் கொலை வழக்காக வழக்கு பதிவு செய்து சங்கீதாவை கைது விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.