17 வயது சிறுவன் இரும்பு கம்பியால் அடித்து கொடூர கொலை.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!
கர்நாடகாவில் 17 வயது சிறுவன் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (17). பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் பெற்றோரை விட்டு பிரிந்து அப்பிகெரேவில் உள்ள தனது மாமாவின் வீட்டில் வசித்து வந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வில் மஞ்சுநாத் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், ஒய்எம்ஆர்ஏசி வட்டம் அருகே உள்ள காலி இடத்தில் மஞ்சுநாத் உடல் கிடந்தது. அவரது தலையில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மஞ்சுநாத் உடலை மீட்டனர். அவரின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிய காயங்கள் இருந்தன. அதனால் மஞ்சுநாத் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
நேற்று இரவு கஞ்சா போதையில் மஞ்சுநாத் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதன் பின் வெளியே சென்ற அவரை மர்மக்கும்பல் கொடூரமாக அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. மஞ்சுநாத் ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், அதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
மறுபுறம், கஞ்சா விவகாரத்தில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மஞ்சுநாத் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மஞ்சுநாத் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே மஞ்சுநாத் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற உண்மை தெரியவரும் என்பதால் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.