கிக் பாக்சிங்கில் பங்கேற்ற இளம் வீரர் பலி!! எதிராளி தாக்கியதில் உயிரிழந்த சோகம்!

 

பெங்களூருவில் குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற வீரரை எதிராளி தாக்கியதில் அவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வீடியோக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நாகர்பாவியில் ரேபிட் ஃபிட்னஸ் உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த உடற்பயிற்சி கூடம் சார்பில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 10-ந் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் மைசூரை சேர்ந்த நிகில் (23) என்பவர் கலந்து கொண்டார்.

அப்போது நிகிலுக்கும் மற்றொரு வீரருக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியின் போது, எதிராளி தாக்கியதில் நிலைகுலைந்த போன நிகில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக போட்டி ஏற்பாட்டாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நிகிலின் பெற்றோர் ஞானபாரதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதில், போட்டி ஏற்பாட்டாளரின் அலட்சியத்தால் தங்கள் மகன் இறந்ததாக புகார் அளித்துள்ளனர். மேலும், போட்டி நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், போட்டி ஏற்பாட்டாளர் நவீன் ரவிசங்கர் தலைமறைவாகி உள்ளார்.

ரேபிட் ஃபிட்னஸ் அரங்கில் நடைபெற்று கொண்டிருந்த கிக் பாக்சிங் போட்டியில் வீரர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.