ஐதராபாத்தில் சோகம்... டிக்கெட் வாங்க வந்த இளம்பெண் கூட்ட நெரிசலில் பலி!!

 

டிக்கெட் வாங்க ரசிகர்களுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டு தள்ளுமுள்ளவில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் வரும் செப்டம்பர் 25-ம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ஜிம்கானா மைதானத்திற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். 

அப்போது டிக்கெட் எடுப்பதற்காக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் டிக்கெட் வாங்க ஒருவரையொருவர் அடித்து முந்தி அடித்துக்கொண்டு சென்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். 

இந்த சம்பவத்தில் டிக்கெட் வாங்க வந்து, கூட்ட நெரிசல் சிக்கிய இளம் பெண் ஒருவர் பலியாகிவிட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட ரசிகர்கள் படுகாயமடைந்தனர். 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஐதராபாத்தில் மட்டுமின்றி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜிம்கானா மைதானத்தில் டிக்கெட் விற்பனைக்காக நான்கு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. கவுன்ட்டர்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஆன்லைனில் பணம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் விளைவாக, டிக்கெட்டுகள் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே விற்கப்பட்டன. டிக்கெட் விற்பனை விவகாரத்தில் ஹைதராபாத் கிரிக்கெட் கிளப் திட்டமில்லாமல் செயல்பட்டதாக ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டினர்.