அதிர்ச்சி!! புதுவையில் 113 பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! காவலர் பயிற்சி பள்ளி மூடல்

 

புதுச்சேரியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 113 பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பயிற்சி பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 100 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் புதுவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 ஆண் மற்றும் பெண் காவலர்கள் கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் தங்கி பயிற்சி பெற்று வந்தனர்.

இதில் ஒரு பயிற்சி காவலருக்கு கடந்த ஜூன் 16-ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு, தினமும் ஒற்றை இலக்கத்தில் பயிற்சி காவலர்கள் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.

இதையடுத்து மருத்துவக்குழு நடத்திய கொரோனா பரிசோதனையில் கடந்த 3-ம் தேதி 29 பேரும், நேற்று (ஆக். 4) 84 பேரும் என மொத்தம் 113 பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்திவிட்டு அனைவரையும் ஒரு வாரம் வீட்டுக்கு அனுப்பி தனிமைப்படுத்துமாறும், இதற்காக காவலர் பயிற்சி பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை விடுமாறும் காவல்துறைக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்பேரில், காவலர் பயிற்சி பள்ளி நேற்று மூடப்பட்டது. காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை மொத்தம் 152 பயிற்சி காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.