பீர் குடித்துக்கொண்டே புல்லட் ஓட்டிய வாலிபர் ரீல்ஸ்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!!

 

உத்தர பிரதேசத்தில் நபர் ஒருவர் ஒரு கையில் பீர் பாட்டிலுடன், மறு கையில் புல்லட் வண்டியை ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பைக் பிரியர்கள் பலர் சாலை விதிகள் மீறி சாகசங்கள் செய்து அதை ரீல்ஸ் வீடியோவாக வெளியிடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உத்தர பிரதேத்தில் புல்லட் வண்டியில் ரீல்ஸ் செய்த வாலிபர் போலீசிடம் சிக்கி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் டெல்லி - மீரட் விரைவு சாலையில் புல்லட் வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்து கொண்டு இருந்து உள்ளார். இந்த நிலையில், அவர் ஒரு கையில் வண்டியை ஓட்டியபடியே மறு கையில் பீர் பாட்டிலை எடுத்து குடித்து உள்ளார். இதனை வேறொரு வாகனத்தில் வந்தவர் வீடியோவாக எடுத்து உள்ளார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது. இது போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கும் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த நபரை தேடி பிடித்து, ரூ. 31 ஆயிரம் அபராதம் விதித்து அதற்கான சலானை வழங்கி உள்ளனர்.

இதில், அந்த புல்லட் வண்டியானது அசலாத்பூர் பகுதியை சேர்ந்த அபிஷேக் குமாருக்கு உரியது என்பதும் வண்டியை ஓட்டியது நூர்பூரை சேர்ந்த சுரேந்திரா குமார் என்பவரின் மகன் அனுஜ் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியதற்காகவும், ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காகவும், அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து வண்டியை ஓட்டிய நபரை முசோரி போலீசார் கைது செய்துள்ளனர். சோசியல் மீடியாவில் மாஸ் காட்டும் ஆர்வத்தில் ரீல்ஸ் வீடியோ போட்ட அனுஜ் அதன் மூலமாகவே போலீசிடம் சிக்கியுள்ளார்.